மனிதனாக பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்கு சேவை செய்வது.

‘சேவை’ என்று தெரியாமலேயே அவரவரும் தமது குடும்பத்துக்காக சேவை செய்கிறோம். அதோடு நமக்கு சம்பந்தம் இல்லாத குடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, சர்வதேசத்துக்கு நம்மால் முடிந்த சேவையைச் செய்ய வேண்டும் என்கிறேன்.

நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்யோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை – இத்யாதி இருக்கின்றன. நம் சொந்த கஷ்டத்திற்கு நடுவில் சமூக சேவை வேறா என எண்ணக்கூடாது.

உலகத்துக்கு சேவை செய்வதாலேயே சொந்த கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும். அதோடுகூட ‘அசலார் குழந்தைக்கு பாலூட்டினால், தன் குழந்தை தானே வளரும்’ என்றபடி நம்முடைய பரோபகாரத்தின் பலனாக பகவான் நிச்சயமாக நம்மை சொந்த கஷ்டத்திலிருந்து கை தூக்கி விடுவான்.

ஆனால் இப்படி ஒரு லாப, நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், பிறர் கஷ்டத்தை தீர்க்க நம்மாலானதை செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்துவிட்டால் போதும்.

அதனால் பிரத்தியான் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும்! நமக்கே ஒரு சித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும், சந்தோஷமும் ஏற்பட்டு அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம்.

– காஞ்சி மஹா ஸ்வாமிகள்
(தெய்வத்தின் குரல்)

Leave A Reply