பக்தர்களின் துயர் துடைத்த ஷீரடி மகான் சாய் பாபா
பாரத தேசத்தில் தொடர்ந்து பல மகான்கள் தோன்றி மக்களை நல்வழிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிராவின் ஷீரடி க்ஷேத்திரத்தில் பல ஆண்டுகள் உடலோடு நடமாடிய மகான் சாய் பாபா, உடலை துறந்த பிறகும் சமாதி நிலையில் இருந்து உலகெங்கும் உள்ள மக்களை இன்றும் நல்வழிப்படுத்தி வருகிறார்.
சின்னஞ்சிறு பாலகனாக ஷீரடி கிராமத்திற்கு வந்த சாய் பாபா, அங்குள்ள ஒரு வேப்ப மரத்தடியில் தியானம் செய்து வந்தார். அங்கு சில காலம் வாழ்ந்த அவர், ஷீரடியை விட்டு வெளியேறினார். பின் சில ஆண்டுகள் கழித்து வாலிப பருவத்தில் மீண்டும் ஷீரடிக்கு வந்த பாபா, தனது இறுதி மூச்சு வரை அங்கேயே தங்கியிருந்தார்.
நம் அனைவரையும் வழிநடத்துபவன் இறைவன் ஒருவனே, எல்லோருக்கும் முதலாளி அவன் ஒருவனே, நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் இறைவனிடம் வைக்கப்படும் நியாயமான கோரிக்கையை இறைவன் நிச்சயம் நிறவேற்றுவார். எல்லா உயிர்களிடத்தும் இறைவனை காண்பாய், பசித்திருக்கும் ஜீவனுக்கு உணவளிப்பவன் இறைவனுக்கு உணவுளிக்கிறான் என்பதே, சாய் பாபாவின் அருள் வாக்கு.
1918 அக்டோபர் 15ம் தேதி, விஜயதசமி திருநாளில் ஷீரடியில் சமாதி நிலையை எய்தினார். அவரது உடலை விட்டு உயிர் பிரிந்த பிறகும் கூட, தன் இருப்பிடம் நோக்கி வரும் பக்தர்கள் மட்டுமின்றி, தொலை துாரத்தில் இருந்து தன்னை நினைக்கும் பக்தர்களுக்கும் அருளாசி வழங்கி பல அதிசயங்களை நிகழ்த்தி வருபவர் பாபா.
என்னை நினைக்கும் பக்தனுடன் என் எலும்புகளும் பேசும், என்னை நாடி வரும் பக்தனுக்கு சமாதியில் உள்ள என் எலும்புகளும் அருளாசி வழங்கும் என சாய் பாபா வாக்களித்துள்ளார். அவர் கூறியபடி, உலகெங்கும் வாழும் அவரது பக்தர்களுக்கு தொடர்ந்து அருளாசி வழங்கி வருகிறார். இதை பலரும் கண்கூடாக அனுபவித்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட மகானின் வாழ்க்கை சரித்திரத்தை, ஹேமாட் பந்த் எழுதியுள்ளார். இதை சாய் பாபாவின் பூரண நல்லாசிகள் இன்றி செய்து முடித்திருக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஒருமுறை ஹேமாட் பந்த் ஷீரடியில் சாய் பாபா தங்கியிருந்த இடத்திற்கு சென்றார். அப்போது கை, கால், முகத்தை கழுவிய பாபா, தரையில் ஒரு சாக்கை விரித்து அதன் மீது மாவு அரைக்கும் திருகை வைத்தார்.
திருகையில் சற்று கோதுமையை இட்டு அதை தொடர்ந்து சுற்றி மாவு அரைக்க துவங்கினார். தினமும் யாசகம் ஏந்தி தன் அன்றாட வாழ்வை கழிக்கும் பாபா, தனக்கென ஒருபோதும் எதையும் சேர்த்து வைக்காத பாபா, அனைத்தையும் துறந்த ஞானியாக வாழும் பாபா, கோதுமை மாவு அரைப்பதின் நோக்கம் என்ன என்பது ஹேமாட் பந்த்துக்கு புரியவில்லை.
பாபா திருகையில் கோதுமையை இட்டு மாவு அரைக்கிறார் என்ற விஷயம் ஷீரடியெங்கும் வேகமாக பரவியது. இதைக் காண ஷீரடி மக்கள் ஒன்று திரண்டனர். ஆனால், அவர் ஏன் இப்படி செய்கிறார் என்பதை அவரிடம் கேட்க யாருக்கும் தைரியம் இல்லை. பாபாவிடம் கேள்வி கேட்டால் அவர் கோபப்படுவாரோ என அஞ்சினர்.
அப்போது கூட்டத்திற்கு இடையே இருந்த நான்கு பெண்கள், தைரியமாக முன்வந்து, பாபாவை வலுக்கட்டாயமாக அங்கிருந்து எழுப்பினர். திருகைக்கு அருகில் அமர்ந்து, அவர்களே திருகையில் கோதுமைையை இருட்டு மாவு அரைக்க துவங்கினர்.
எதையும் சேர்த்து வைக்காத பாபாவுக்கு இவ்வளவு மாவு எதற்கு என தங்களுக்குள் பேசிக் கொண்டு, அவற்றை நான்கு பேரும் பங்கிட்டுக்கொண்டனர்.
அதுவரை அமைதியாக இருந்த சாய் பாபா, பெண்களின் செயலைக் கண்டு கொதித்து எழுந்தார். இந்த மாவை எடுத்துச் சென்று கிராமத்தின் எல்லையில் கொட்டி விட்டு வாருங்கள் என அவர்களுக்கு பாபா கட்டளையிட்டார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.
பின் பாபாவின் கட்டளை குறித்து கிராம மக்களிடம் ஹேமாட் பந்த் கேட்டார். ஷீரடியில் காலரா நோய் வேகமாக பரவியது. எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாவதை தடுக்க முடியவில்லை.
பாபா அரைத்த மாவை கிராம எல்லையில் கொட்டிவிட்டு வந்த பின், ஷீரடியில் காலரா நோய் காணாமல் போனது. பாபா திருகையில் இட்டு அரைத்தது வெறும் மாவு அல்ல. காலரா நோயைத்தான் அவர் அரைத்து, கிராமத்தை விட்டு வெளியேற்றியதாக கிராம மக்கள் கூறினர்.
சாய் பாபா கிட்டத்தட்ட 60 ஆண்டுள் ஷீரடியில் உயிருள்ள உடலோடு நடமாடியதாகவும், அப்போது அவர் தினமும் மாவு அரைத்தலை தொடர்ந்து மேற்கொண்டதாகவும், ஹேமாட் பந்த் கூறுகிறார்.
அந்த வகையில் கர்மம், பக்தி ஆகிய இரு கற்களால், ஞானம் எனும் கைப்பிடியை பயன்படுத்தி, பக்தர்களின் துன்பத்தை பாபா போக்கினார் என ஹேமாட் பந்த், சாயி சத் சரிதத்தில் கூறுகிறார்.
ஓம் சாய் ராம்.


