முருகா….
மாயோன் மருகா

முக்கண்ணன் புதல்வா
உமையாள் பாலா

துதிக்கையோன் தம்பியே
துதிப்பவர்க்கு துணை நீயே

அகத்தில் உனை நினைத்தால்
அகன்றிடும் துன்பமெல்லாம்

ஆறுமுக சுவாமியாலே
ஆற்றல் பெருகிடுமே

இன்னல்கள் போக்கியே
இன்பம் தருபவனே

ஈரேழு புவனத்தில்
ஈடில்லா இறைவன் நீ

உனை நோக்கி துதித்தாலே
ஊழ்வினைகள் களைந்திடுமே

எல்லாம் வல்ல இறைவா நீ
ஏழை என்னை காக்க ஓடி வா நீ

ஐயம் களைந்து
ஆறுதல் தந்திடுவாய்

ஒப்பில்லா நாயகனை
ஒருநாளும் மறவேனே

ஓங்கார பொருள் நீயே
ஓடி வந்து காத்திடுவாய்

ஓளடதமாய் துணை நின்று
உன்னத வாழ்வளிப்பாய்

அஃறிணையாய் நானிருக்க
அறிவொளி ஏற்றிடுவாய்

உயர்திணையாய் எனை மாற்றி
உயர்ந்ததோர் வாழ்வளிப்பாய்

முருகா போற்றி ஸ்கந்தா போற்றி
வடிவேல் அழகா வள்ளி மணாளா

தெய்வானை கரம் பிடித்தாய்
தேர்வர்க்கு அருள் புரிந்தாய்

தேடி வந்த என்னையும்
கரை தேர்த்தி விட்டிடப்பா

பிறவிப் பெருங்கடலை
கடக்கும் வழியின்றி

பித்தனாய் திரியும் எனை
கரம் பிடித்து செல்லப்பா

என்ன தவம் புரிந்தேனோ
இச்சென்மம் நான் உனை அறிய

முக்தி அளிப்பாய் குமரா
மூடனுக்கு இது போதும்!

Leave A Reply